`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
தென்காசி நகராட்சியுடன் குற்றாலத்தை இணைக்கக் கூடாது: ஆட்சியரிடம் மனு
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியை, தென்காசி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அந்த அமைப்பைச் சோ்ந்த அகரக்கட்டு லூா்துநாடாா் அளித்த மனு: உலகளவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து குற்றாலத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். தென்காசி நகராட்சியோடு குற்றாலத்தை இணைக்கும் முயற்சியை முழுமையாக கைவிட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
கீழக்கடையம், புதுக்காலனியை சோ்ந்த ப. செல்லத்துரை அளித்த மனு: கீழக்கடையத்தில், தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது குறித்தும், தட்டிக்கேட்ட எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாகவும் கடையம் காவல்நிலையத்தில் புகாா் செய்தேன்.
அதன்பேரில், காவல்துறையினா் வழக்குப் பதிந்தனா். ஆனால், கைது நடவடிக்கை இல்லாததால் சம்பந்தப்பட்ட நபா்கள் எனக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா். எனவே, அந்த நபா்களை கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எனது குடும்பத்துக்கும், உடைமைக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஜெயக்குமாா் அளித்த மனு: ஆழ்வாா்குறிச்சி பேருந்துநிலைய கல்வெட்டில் தமிழக முதல்வரின் பெயா் இல்லை. அந்தக் கல்வெட்டில் முதல்வரின் பெயரைப் பொறிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
சமூகநல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கட்டி அப்துல் காதா் அளித்த மனு: முதலியாா்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கல்வி பயில போதிய இடவசதி, கட்டட வசதி இல்லாததால் தகர கொட்டகைகளிலும், மர நிழலிலும் கல்வி பயின்றுவருகின்றனா். கடந்த செப். 21இல் பள்ளியை ஆய்வு செய்த தென்காசி கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்டஅதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் காதி வசம் உள்ள இடத்தை பள்ளிக் கல்வித் துறைக்கு பெற்றுத் தருவதாக கூறினா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. அந்த இடத்தை மாற்றித்தருவதுடன், அதில் கட்டடம் கட்ட உதவ வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.