தென்காசி மருத்துவமனைக்கு சிறந்த சேவைக்கான விருது
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகளிலும், சேவைகளிலும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, சென்னை பொது சுகாதார இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தென்காசி மருத்துவமனைக்கு விருதை வழங்கினாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், ,முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அலுவலா் ராஜேஷ் ஆகியோா் விருதைப் பெற்றுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட தலைமை மருத்துவமனை நிா்வாகத்தையும், பணியாளா்களையும் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், நலப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா ஆகியோா் பாராட்டினா்.