தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
மும்பை: தனியார் துறை வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியின் வலுவான 4-வது ஆண்டு வருவாயால் உந்தப்பட்டு, பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று தொடர்ந்து ஐந்தாவது அமர்வாக தங்கள் வெற்றிப் பாதையை நீட்டித்ததால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தது.
தொடர்ந்து அந்நிய வருகையால், முதலீட்டாளர்களின் உணர்வு மேலும் வலுவடைந்த நிலையில், எஃப்ஐஐ-கள் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக பங்குகளை வாங்கி குவித்ததால், நிஃப்டி 273.90 புள்ளிகள் உயர்ந்து 24,125.55 புள்ளிகளில் முடிந்தது.
வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,081.85 புள்ளிகள் உயர்ந்து 79,635.05 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 855.30 புள்ளிகள் உயர்ந்து 79,408.50 புள்ளிகளிலும், நிஃப்டி 273.90 புள்ளிகள் உயர்ந்து 24,125.55 புள்ளிகளிலும் நிலைபெற்றது.
ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றின் காலாண்டு முடிவுகளால் நிஃப்டி வங்கி குறியீடு 55,461 என்ற சாதனை உச்சத்தை எட்டியது. டெக் மஹிந்திரா மற்றும் ஹெச்சிஎல் டெக் நிறுவனங்களின் வலுவான நகர்வுகளால் நிஃப்டி ஐடி 2.5% உயர்ந்தது முடிந்தது.
நிஃப்டி ஆட்டோ 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அதே நேரத்தில் மெட்டல், எண்ணெய் & எரிவாயு, பொதுத்துறை வங்கி மற்றும் ரியால்டி குறியீடுகள் ஒவ்வொன்றும் 2சதவிகிதத்திற்கும் அதிகமான லாபத்தை பதிவு செய்தது.
இதற்கு நேர் எதிர்மறையாக, நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 1% சரிந்த நிலையில் ஐடிசி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் வருண் பிவரேஜஸ் ஆகிய பங்குகளும் கிட்டத்தட்ட 1% சரிந்தது முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
அதே வேளையில், அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
மார்ச் காலாண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 7 சதவிகித வளர்ச்சியைக் கண்டு ரூ.18,835 கோடியாக உயர்ந்ததையடுத்து, முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 1 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்து முடிந்தது.
இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் தொடர்ச்சியாக 3.3 சதவிகிதம் உயர்ந்ததையடுத்து இன்போசிஸ் பங்குகள் 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் உயர்ந்து, பெஞ்ச்மார்க் குறியீடுகளிலும் பேரணியை உயர்த்தியது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம், வியாழக்கிழமை (17-04-25) அன்று ரூ.4,667.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மற்றும் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் ஆகியவை உயர்ந்த அதே நேரத்தில் டோக்கியோவின் நிக்கேய் 225 சரிந்து முடிந்தது. ஹாங்காங்கில் சந்தைகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமை அன்று பெரும்பாலும் சரிந்து முடிவடைந்தது. 'புனித வெள்ளி'யை முன்னிட்டு அமெரிக்க பங்குச் சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று மூடப்பட்டிருந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.71 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 66.25 டாலராக உள்ளது.
இதையும் படிக்க: ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!