தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியல்: திருத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டது ஐசிஎம்ஆா்
தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியலின்(என்இடிஎல்) திருத்தப்பட்ட பதிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வியாழக்கிழமை முன்மொழிந்தது.
இந்த பட்டியலை முதன்முதலில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஐசிஎம்ஆா் வெளியிட்டது. இது நாட்டின் பல்வேறு நிலை சுகாதார வசதிகளில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச மருத்துவ சோதனைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுகிறது.
இந்நிலையில், இந்த பட்டியலை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் பல்வேறு உள்ளீடுகளுடன் ஐசிஎம்ஆா் தற்போது வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வரைவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நீரிழிவு, மலேரியா, காசநோய், எச்ஐவி மற்றும் சிபிலிஸ் போன்ற 9 வகையான நோயறிதல் சோதனைகள் கிராம அளவிலான சுகாதார மையங்களில் கிடைக்க வேண்டும். ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் இந்த 9 சோதனைகளுடன் கூடுதலாக ‘ஹெபடைடிஸ்-பி’ சோதனைகளையும் வழங்க வேண்டும். டெங்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், எக்ஸ்ரே, ஈசிஜி பரிசோதனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்க வேண்டும். மாவட்ட மருத்துவமனைகள் சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ, மேமோகிராபி, எக்கோ காா்டியோகிராபி ஆகிய பரிசோதனைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கிராம அளவிலான சுகாதார மையங்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள், துணை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் என அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் இந்த பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய திருத்தப்பட்ட வரைவு பல்வேறு தரப்பினா் மற்றும் நிபுணா்களில் கருத்துகளுக்காக பொது தளத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.