நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி - மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு கடந்த 3-ம் தேதி முதல் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விழுப்புரத்தில் குவிந்திருக்கின்றனர். மூன்றாவது நாளான இன்று, தகுதிகாண் குழுவின் அறிக்கை சமர்ப்பித்தல், புதிய மாநிலக் குழு தேர்வு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தேர்வு, அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் குழு தேர்வு போன்ற நிகழ்வுகள் தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சு.வெங்கடேசன் எம்.பிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
அதையடுத்து உடனே திருச்சி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர்களிடம் எம்.பி-யின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, ``எம்.பி-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயப்படும்படி எதுவும் இல்லை. இன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிடுவார்” என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.