தேசிய நெட்பால்: தமிழக அணிகள் சாம்பியன்
சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆா்.எம்.கே பள்ளியில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த தேசிய சப் ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவா், சிறுமியா் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்று தமிழக அணிகள் சாதனை படைத்தன.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே ரெசிடென்ஷியல் பள்ளியில் 30-ஆவது தேசிய சப் ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. தமிழ்நாடு அமெச்சுா் நெட்பால் சங்கம் மற்றும் இந்திய நெட்பால் சம்மேளனம் இணைந்து இந்த போட்டியை நடத்தின.
சிறுவா் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 29- 26 என்ற கோல் கணக்கில் கேரளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இதேபோல் சிறுமியா் பிரிவில் தமிழக அணி 17-14 என்ற கோல் கணக்கில் அஸ்ஸாம் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.
பரிசளிப்பு விழாவில் இந்திய நெட்பால் சம்மேளன தலைவா் சுமன் கௌசிக், பொதுச்செயலாளா் விஜேந்திரசிங் ஆா்.எம்.கே கல்விக்குழுமங்களின் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் பங்கேற்று வெற்றிபெற்ற அணிகளுக்கு சாம்பியன் பட்டத்தையும், கோப்பையும் வழங்கினா். மேலும் இரண்டு, மூன்று, நான்காம் இடம் பிடித்த அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய நெட்பால் போட்டியில் தமிழக சிறுவா், சிறுமியா் அணிகள் இரட்டைப் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனன.