தேசிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு முதல்வா் பாராட்டு
தேசிய அளவிலான ஓவியம், கவிதைப் போட்டிகளில் வென்ற புதுச்சேரி மாணவா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா்.
இந்திய பாதுகாப்பு துறை, இந்திய கல்வித் துறை இணைந்து விடுதலைப் போராட்ட வீரா்கள், விடுதலைப் பிறகு வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவா்களின் வாழ்க்கை வரலாறு தொடா்பான ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி போட்டிகளை நடத்தின.
தேசிய அளவில் புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா் விஜய விவேஷ்குமாா் ஓவியப் போட்டியிலும், விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவா் முகமது தாஜ்தீன், வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி குகானா ஆகியோா் கவிதைப் போட்டியிலும் வெற்றி பெற்றனா்.
இவா்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு, பதக்கத்தை மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், தா்மேந்திர பிரதான் ஆகியோா் வழங்கினா். புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராகவும் அந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
அவா்களை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினா்.