சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி
புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், அதன் உறுப்புக் கல்லூரியான சட்டக் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் ஹரியாணாவிலிருந்து மொத்தம் 28 அணிகள் பங்கேற்றன.
வழக்கு வாத இறுதிப்போட்டியில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜா , உயா்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி ஆகியோா் நடுவா்களாக இருந்தனா்.
போட்டியில் சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி, ஆராய்ச்சி நிறுவன சட்டக் கல்லூரி முதலிடமும், பெங்களூரு ராமையா பல்கலைக்கழக சட்டக் கல்லூரி 2-ஆம் இடமும் பெற்றன.
போட்டி நிறைவு விழாவுக்கு ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி குழுமத்தின் தலைவா், மேலாண் இயக்குநா் எம். தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி இயக்குநா், முதல்வா் வெங்கடாசலபதி வரவேற்றாா். சட்டக் கல்லூரி முதல்வா் வின்சென்ட் அற்புதம் நன்றி கூறினாா்.