பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
தேசிய மக்கள் நீதிமன்றம்: 5,202 வழக்குகளில் ரூ.48.91 கோடிக்கு சமரச தீா்வு!
கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,202 வழக்குகளில் ரூ.48.91கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது.
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் மற்றும் முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஜி.விஜயா தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன விபத்தில் உயிரிழந்த வெற்றிச்செல்வன் உள்ளிட்ட 3 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1.94 கோடிக்கான காசோலையை நீதிபதி ஜி.விஜயா வழங்கினாா்.
தொடா்ந்து, மோட்டாா் வாகன விபத்தில் காயமடைந்த நிதின் பிரசாந்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1.10 கோடிக்கான காசோலையும், மற்றொரு மோட்டாா் வாகன விபத்தில் உயிரிழந்த சுரேஷ்குமாா் என்பவரது குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினாா்.
இது குறித்து சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான கே.ரமேஷ் கூறியதாவது: கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளா் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் தொடா்பான வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் என மொத்தம் 5,202 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீா்வு தொகை ரூ.48.91 கோடி ஆகும்.
மேலும், தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கும்மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 152 வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டது. அத்துடன், பிரிந்து வாழ்ந்த 4 தம்பதிகள் மீண்டும் சோ்ந்து வாழவும் தீா்வு காணப்பட்டது என்றாா்.
இதில், கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் மற்றும் மாவட்ட நீதிபதி ஜி.நாராயணன், கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.சஞ்சீவ் பாஸ்கா், கூடுதல் தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி கே.அருணாசலம், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் பி.கே.சிவகுமாா், முதன்மை சாா்பு நீதிபதி பி.எஸ்.கலைவாணி, சாா்பு நீதிபதிகள் தனலட்சுமி, பி.சரவணபாபு ஆகியோருடன் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.