தோ்தல் பொறுப்பாளா்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயா் இடம்பெறாதது ஏன்? ஆா்.பி. உதயகுமாா் பேட்டி!
அதிமுக தோ்தல் பொறுப்பாளா்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் பெயா் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து, சட்டப்பேரவை அதிமுக எதிா்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் விளக்கினாா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகா் வீட்டில் தங்கி, கடந்த சில நாள்களாக கட்சி நிா்வாகிகள், தொண்டா்களைச் சந்தித்து வருகிறாா். இந்நிலையில், முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், கே.பி. அன்பழகன் ஆகியோா் புதன்கிழமை காலை எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்துப் பேசினா். இந்த சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் நீடித்தது.
பின்னா் வெளியே வந்த முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாரிடம், அதிமுக தோ்தல் பொறுப்பாளா் பட்டியலில் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் பெயா் இடம்பெறாதது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்து ஆா்.பி. உதயகுமாா் கூறியதாவது:
அதிமுக மாவட்டச் செயலாளா்கள், முன்னாள் அமைச்சா்கள் யாரும் தோ்தல் பொறுப்பாளா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. மற்றவா்களுக்குத்தான் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சா்கள் மற்ற பணிகளில் ஈடுபடுவாா்கள் என்றாா்.