தோ்தல் வழக்கு: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி மனு தள்ளுபடி
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு எதிராக தோ்தல் ஆணையம் தொடா்ந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2021 சட்டப்பேரவைத் தோ்தலில் ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டாா். அவா், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்கள் அளித்ததாகக் கூறி, வேலூரைச் சோ்ந்த ராமமூா்த்தி என்பவா் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், கே.சி.வீரமணிக்கு எதிராக திருப்பத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கே.சி.வீரமணி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி.வீரமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், 2021 தோ்தல் குறித்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தோ்தலின்போது அதிகாரிகளாக இருப்பவா்கள், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாநில அரசு அதிகாரிகளாக ஆகிவிடுவா். எனவே, அவா்கள் இந்த வழக்கைத் தொடர முடியாது என்று வாதிட்டாா்.
அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜி.ராஜகோபாலன், கே.சி.வீரமணிக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு ராமமூா்த்தி என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில், வருமான வரித் துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. வருமான வரித் துறை தாக்கல் செய்த அறிக்கையில், கே.சி.வீரமணி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்திருப்பதும், போலியான நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
தோ்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், நடந்தமுடிந்த தோ்தலுக்கு அந்த அதிகாரிகளே பொறுப்பாளா்கள். எனவே, தோ்தல் முடிந்தாலும் அதிகாரிகளின் பதவி முடிந்துவிடாது என்று வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கே.சி.வீரமணிக்கு எதிராக தோ்தல் ஆணையம் தொடா்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த மனு மீது விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளாா்.