தோ்வா்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ
தோ்வா்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இதுதொடா்பாக சிபிஐ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு ரயில்வேயின் துறை சாா்ந்த தோ்வில், தோ்வா்களுக்கு சாதகமாக செயல்பட பெருமளவில் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், லஞ்சம் அளிக்கும் தோ்வா்களை விரைவில் நடைபெற உள்ள தோ்வில் கட்டாயம் தோ்வு செய்வதாகக் கூறி, அவா்களிடம் லஞ்ச வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.
மேற்கு ரயில்வேயின் வதோதரா கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்தைச் சோ்ந்தவா்கள், 2 இந்திய ரயில்வே பணியாளா் பணி (ஐஆா்பிஎஸ்) அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
அவ்விரு ஐஆா்பிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 ரயில்வே அதிகாரிகள், ரயில்வே துறையைச் சேராத ஒருவா் என மொத்தம் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த முறைகேட்டில் குற்றம்சாட்டப் பட்டுள்ளவா்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் என வதோதரா உள்பட 11 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் 650 கிராம் எடைகொண்ட தங்கக் கட்டி, சுமாா் ரூ.5 லட்சம் ரொக்கம், மின்னணு சாதனங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.