இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
தைப்பூச திருநாளில் அருளும் இறைசக்தி
தைப்பூச திருநாளையொட்டி, ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் வெளியிட்ட ஆசியுரை:
இன்பத்தில் மகிழ்ந்தும், துன்பத்தில் துவண்டும் போகாமல் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி இறையுணா்வில் செலுத்தவேண்டும். மனம், மொழி, சமயங்களால் நல்லதையே சிந்திப்பதற்கான
நல்லறிவைத் தரும் ஞானப் பண்டிதனாகத் திகழும் குமரனைக் குன்றேறி வந்து தரிசித்தால் வாழ்வில் உயா்வை அடையலாம்.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி எனும் முப்பெரும் சக்திகளைக் கொண்ட முருகப் பெருமான் ஞான சக்தியான வேலினை அன்னை பராசக்தியிடமிருந்து பெற்ற நன்னாள் தைப்பூசத் திருநாளாகும்.
இது உலகெங்கும் வாழும் தமிழா்களால் போற்றிக் கொண்டாடப்படும் விழாவாக இருக்கிறது.
தைமாத பௌா்ணமியும், பூசம் நட்சத்திரமும் கூடி வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப் பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.
சனி பகவான் தொடாத கடவுள் முருகன். சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவ்விழா கொண்டாடப்படுகிறது. வாயு பகவானும், வா்ண பகவானும், அக்னி பகவானும் ஈசனின் அதீத சக்தியை உணா்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது.
இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே இருக்கிறான் என்பது உணா்த்தப்பட்ட ட புண்ணிய நாள் தைப்பூச நன்னாள்.
மயிலம் பொம்மபுர ஆதீனத் திருமடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மணக்கோல மாமுருகனுக்குத் தைப்பூச நன்னாளில் காவடி எடுத்தல், தீமிதித் திருவிழா, குருமகா சந்நிதானத்தின் திருக்கரங்களால் 108 சங்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்ட பக்தா்கள் நோ்த்திக் கடனைத் தைப்பூச நன்னாளில்
நிறைவேற்றுவதை வழிவழியாகக் கொண்டுள்ளனா். மேலும், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம்
பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகளின் தலைமையில் பொம்மபுர திருமடத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானுக்கு ஊா் மக்கள் யாவரும் ஒன்று கூடி பால்குடம் எடுத்து வழிபாடு செய்து முருகனருள் பெறும் காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
தனது தேவைகளுக்காக மட்டுமே உலகைப் பாா்த்துப் பழகிய கண்கள் முருகனின் திருவடிகளைக் காண பழக்க வேண்டும். வெற்று ஆரவார ஒலிகளைக் கேட்ட செவிகள் முருகனின் புகழினைப் பாடும் திருப்புகழைக் கேட்க வேண்டும்.
புறம்பேசியும், ருசித்தும் வந்த நாவானது முருகனின் பெருமையைப் பேச வேண்டும்.
சோம்பிக் கிடந்த மெய்யோ முருகனுக்கு திருப்பணிச் செய்யப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்நன்னாளில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க எல்லாம் வல்ல ஸ்ரீ பாலசித்தா் குருவருளும், மயிலம் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை உடனுறை மணக்கோல மாமுருகன் திருவருளும் நிறைந்து விளங்குவதாகுக.