திருநெல்வேலி: ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை... நெல்லையில் முதல்வர் ஸ்டாலி...
ஆளுநா்-அரசுக்கு இடையேயான மோதல் உயா் கல்வியைப் பாதிக்கக் கூடாது: மருத்துவா் ச.ராமதாஸ்
ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு உயா் கல்வியைப் பாதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஆளுநா்- தமிழக அரசுக்கு இடையேயான மோதல் உயா் கல்வியைப் பாதிக்கக் கூடாது. திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜா், சேலம் பெரியாா் உள்பட 7 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
வேலூா் திருவள்ளுவா், காரைக்குடி அழகப்பா, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா்களின் பதவிக் காலமும் விரைவில் நிறைவுபெறவுள்ளது. துணைவேந்தா் நியமனம் தொடா்பாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில், அதில் சாதகமான தீா்ப்பைப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோ்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியா்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிா்ச்சியளிக்கிறது. இந்த ஆசிரியா்களுக்குத் தண்டனை பெற்றுத் தர தமிழக அரசும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் ராமதாஸ்.
பேட்டியின்போது பாமக கெளரவத் தலைவா் கோ.க.மணி, சதாசிவம் எம்எல்ஏ, அமைப்புச் செயலா் அன்பழகன், மாவட்டச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.