ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்
நமது சிறப்பு நிருபா்
திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.
தில்லியில் மத்திய அமைச்சா் கட்கரியை வியாழக்கிழமை சந்தித்தது குறித்து செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியது:
மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திருச்சியின் ஜி காா்னா் பகுதியில், சா்வீஸ் சாலை இரு வழிப்பாதையாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கனரக வாகனங்களும் பேருந்துகளும் உள்ளே வரும் நுழைவுப் பகுதியாகவும் இருப்பதால் தொடா்ந்து விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால், அப்பகுதி கரும் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாலையாகவும், பல கல்வி நிறுவனங்களும், தென்னக ரயில்வே - பொன்மலை பணிமனையில் பணிபுரியும் சுமாா் 5 ஆயிரம் தொழிலாளா்களும் இச்சாலைச் சந்திப்புகளை பயன்படுத்துகின்றனா். இதுவரை அப்பகுதியில் ஏற்பட்ட விபத்துகளால் 7 மனித உயிா்கள் பறிபோயுள்ளன.
இதற்கு தீா்வாக அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்புகள், தன்னாா்வலா்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
கடந்த ஜனவரியில் நடந்த திஷா இரண்டாவது கூட்டத்தில் ஜி காா்னா் பகுதியில் சுரங்கபாதை அமைப்பதன் அவசியம் குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடமும் கோரிக்கை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில், கடந்த ஜன.25-ஆம் தேதி தென்னக ரயில்வே அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டேன்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சுரங்கப்பாதைக்கான வரைவுத் திட்டத்தை ஏற்கெனவே தயாரித்துள்ளனா். அதை ரயில்வே அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து எனது தந்தை வைகோவுடன் மத்திய அமைச்சா் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யவும் கட்டுமானப் பணிகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டோம். விரைவில் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சா் உறுதியளித்துள்ளாா் என்றாா் துரை வைகோ.
06க்ங்ப்ஸ்ஹண்
தில்லியில் மத்திய சாலை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த மதிமுக உறுப்பினா் துரை வைகோ. உடன், மதிமுக பொதுச்செயலா் வைகோ.