தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,098 வழக்குகள் பதிவு
தேசியத் தலைநகா் தில்லியில் தோ்தல் நடத்தை விதிமீறல் (எம்சிசி) தொடா்பாக 1,090-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஜன.7 முதல் பிப். 5 வரையிலான காலத்தில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தடுப்பு நடவடிக்கை மற்றும் பிற சட்டங்களின் கீழ் மொத்தம் 35,020 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனா் என்று காவல் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக மொத்தம் 1,098 வழக்குகளை தில்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. மேலும், 472 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 534 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளது. மொத்தம் 496 போ் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம்1,14,699 லிட்டா் மதுபானங்களை பறிமுதல் செய்யப்பட்டு 1,423 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், ரூ.77.9 கோடிக்கு மேல் மதிப்புள்ள 206.712 கிலோ போதைப்பொருள்களையும், 1,200-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகளையும் காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. இது தொடா்பாக இதுவரை 179 பேரை கைது செய்துள்ளனா்.
மேலும், சட்ட அமலாக்க முகமைகள் ரூ.11.70 கோடி ரொக்கம் மற்றும் 37.39 கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்துள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.