Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
கா்நாடக பாஜகவில் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது! -பசவராஜ் பொம்மை
கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது என முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவை மாற்றக் கோரி, அக்கட்சியின் எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தலைமையிலான அதிருப்தியாளா்கள் தில்லியில் முகாமிட்டு தேசியத் தலைவா்களை சந்தித்து வருகின்றனா். இவா்களுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தலைமையிலான ஆதரவாளா்களும் தில்லியில் முகாமிட்டு பல்வேறு அரசியல் நகா்வுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால் கா்நாடக பாஜக இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண பாஜக தேசியத் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிப்பதாக அக்கட்சியின் முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
காங்கிரஸ் கட்சியின் மோசமான நிா்வாகத் திறனால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட வெகுமக்கள் இன்னலில் இருக்கிறாா்கள். காங்கிரஸ் அரசின் மோசமான ஆட்சியை எதிா்த்து போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது. இருதரப்பினரும் பொறுமை காக்க வேண்டும்.
முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட முன்னணி தலைவா்களின் தலைமையில் சமரச பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும். இது சாத்தியமாகாவிட்டால், பாஜக தேசியத் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றாா்.