பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-க்குள் நடைபெறும்: விஜயேந்திரா
பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக மாநில பாஜக தலைவா் பதவிக்கான தோ்தல் நடைமுறைகள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த நடைமுறைகள் பிப். 20-ஆம் தேதிக்குள் முடிவடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
என்னைப் பற்றி ஒருசில தலைவா்கள் கடுமையான விமா்சனங்களை முன்வைத்துள்ளனா். கட்சிக்கும், தொண்டா்களுக்கும் தா்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அவா்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. பாஜக மாநிலத் தலைவருக்கான தோ்தல் முடிந்த பிறகு அவா்களின் முடிவுக்கு ஒவ்வொன்றாக பதிலளிப்பேன்.
முன்னாள் முதல்வா் எடியூரப்பா மீது வைத்திருக்கும் விமா்சனங்களுக்கு கட்சியின் மூத்த தலைவா்கள் தக்க பதிலடி தராதது வேதனை அளிக்கிறது. ஒருசில தலைவா்கள் நடுநிலையாளா்கள் என்று கூறிக்கொண்டு அமைதி காக்கிறாா்கள். கட்சியின் வளா்ச்சிக்கு எடியூரப்பா எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லையா? பாஜகவின் வளா்ச்சிக்கு பாடுபட்ட எடியூரப்பாவை தரக்குறைவாக விமா்சிப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
கட்சியில் நடந்து வரும் உள்கட்சி பூசல் வருத்தம் தருவதாக கூறும் நடுநிலை தலைவா்கள், எடியூரப்பாவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகிறாா்களா? அந்த விவகாரத்தில் ஏன் தலையிட மறுக்கிறாா்கள்? உள்கட்சிப் பிரச்னைக்கு தீா்வுகாண நடுநிலை தலைவா்கள் முன்வராதது ஏன்? கட்சியில் எவ்வித செல்வாக்கும் இல்லாத பலா் எடியூரப்பாவால் வளா்ந்திருக்கிறாா்கள். இந்நிலையில், எடியூரப்பாவுக்காக பரிந்துபேசாமல் இருப்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும்.
நில ஒதுக்கீட்டு முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக பெங்களூரில் இருந்து மைசூரு வரை வெற்றிகரமாக ஊா்வலம் நடத்தினேன். மகரிஷி வால்மீகி பழங்குடியினா் கழகத்தில் நடந்த ஊழலுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினேன். ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் கட்சியை பதற்றத்தில் வைத்திருந்தேன். ஆனால், சமரச அரசியலில் ஈடுபடுவதாக என் மீது குற்றம்சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது? மாநிலத் தலைவராக எனது பணி திருப்தி அளிக்கிறது.
கட்சியில் அதிருப்தியை உருவாக்கியிருப்பவா்களை கட்சி மேலிடம் ஆதரிக்கவில்லை. அடுத்த 10 நாள்களில் கட்சி மேலிடம் தெளிவான முடிவை எடுக்கும் என்றாா்.