14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?
தொடரும் மர்மம்: முடி உதிர்ந்து வழுக்கையான கிராமத்தில் நகம் சேதமடைந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஷெகாவ் தாலுகாவில் உள்ள நான்கு கிராமங்களில் மக்களின் தலையில் இருந்து திடீரென முடி உதிர ஆரம்பித்தது.
மொத்தம் மொத்தமாக முடி உதிர்ந்து ஒட்டுமொத்த தலையே வழுக்கையானது.
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடந்த இச்சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோரின் தலை வழுக்கையாது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாநில அரசு இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தது.

மக்கள் பயன்படுத்தும் கோதுமையில் பூச்சிகொல்லி அதிகமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் இப்போது மேலும் ஒரு புதிய பிரச்னை எழுந்துள்ளது. ஏற்கெனவே தலைமுடி பிரச்னையால் பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நகம் திடீரென கழன்று விழுந்து வருகிறது. அல்லது நகம் சேதம் அடைந்து விழுகிறது.
இதையடுத்து மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இது வரை 29 பேர் தங்களது கையில் இருந்த நகத்தை இழந்துள்ளனர். இன்னும் எத்தனை பேருக்கு இது போன்று நகம் விழுமோ என்ற அச்சம் கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து புல்தானா சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் அனில் கூறுகையில்,'' இது வரை ஷெகாவ் தாலுகாவில் 4 கிராமத்தில் 29 பேருக்கு நகம் சேதம் அடைந்துள்ளது. சிலருக்கு நகம் கழன்று விழுந்துள்ளது. அவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்'' என்றார்.

கிராம பஞ்சாயத்து தலைவர் ராம் தர்கார் இது குறித்து கூறுகையில், '' கடந்த சில நாள்களாக எங்களது கிராமத்தில் உள்ளவர்களிடம் நகம் கழன்று வருகிறது. முதல் இரண்டு நாளில் நகத்தில் விரிசல் ஏற்படுகிறது. அதன் பிறகு கீழே விழுந்து விடுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அமைச்சருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்''என்றார்.
இதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. செலினியம் அதிகப்படியாக இருப்பதால் நகம் மற்றும் முடி உதிர்வதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. செலினியம் பொதுவாக தண்ணீர், மண் மற்றும் சில உணவுகளில் காணப்படுகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
