ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
Kerala: சிட்டுக் குருவியைக் காப்பாற்ற 50 கி.மீ பயணித்த நீதிபதி - நெகிழவைத்த கிராமத்தினர்!
கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள உள்ளிக்கல் என்ற கிராமத்தினர், ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன.
சீல் வைக்கப்பட்ட துணிக்கடையில் சிக்கிக்கொண்ட சிட்டுக்குருவியைக் காப்பாற்ற, கிராம மக்களுடன் மாவட்ட நிர்வாகமும் நீதித்துறையும் செயல்பட்ட சம்பவம், மனதை நெகிழவைக்கிறது.

உரிமையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு படி, 6 மாதங்களாக சீல் வைக்கப்பட்டு பூட்டிக்கிடக்கும் துணிக்கடைக்குள் சிக்கியுள்ளது சிட்டுக் குருவி ஒன்று.
கட்டடத்தில் உள்ள குழாய் வழியாக உள்ளே சென்ற பறவை மீண்டும் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் மாட்டிக்கொண்டதாக அக்கம்பக்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடையின் கண்ணாடி முகப்புக்கும் ஷட்டருக்கும் இடையிலான இடத்தில் கடந்த செவ்வாய் அன்று அதனைக் கண்டுள்ளனர். இறக்கைகளை படபடப்பாக அடித்தபடி, மனிதர்களை வெறித்துக்கொண்டிருந்த அந்த குருவியை சட்ட சிக்கல்கள் காரணமாக கடையைத் திறக்க முடியாததால் காப்பாற்ற முடியவில்லை.

ஆனாலும் குருவியின் உயிரைக் காக்க தானியங்களையும் தண்ணீரையும் குழாய் வழியாக வழங்கியுள்ளனர்.
குருவியைக் காப்பாற்ற பஞ்சாயத்து அதிகாரிகள், வனத்துறையினர் மற்றும் சில அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளனர். யாராலும் உதவ முடியவில்லை. இதற்கிடையில் குருவி பற்றிய செய்தி ஊடகங்கள் வழியாக பரவியது.
மாவட்ட ஆட்சியர் அருண் கே விஜயன், மாவட்ட நீதிபதியைத் தொடர்புகொண்டு அவர் மூலமாக பஞ்சாயத்து அதிகாரிகள் கடையைத் திறக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மாவட்ட நீதிபதி, இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவைப் பெற்றார். வியாழன் அன்று தக்கலசேரியில் இருந்து 50 கிலோமீட்டர் பயணம் செய்து துணிக்கடையை அடைந்து அவர் முன்னிலையில் கடையைத் திறக்க உத்தரவிட்டார்.
கதவு திறக்கப்பட்டு பறவை வெளியே வரவும், பறவையின் சுதந்திரத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
நீதிபதி, "மனிதரோ, விலங்குகளோ, பறவையோ ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. உயிர் வாழ்வதற்கு நீதிமன்றமோ சட்மோ தடையாக இருக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.