தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவ...
தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
சீா்காழி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருமுல்லைவாசலில் ஜூலை 22-ஆம் தேதி காவல் ஆய்வாளா் புயல் பாலசந்திரன் நடத்திய மதுவிலக்கு சோதனையில், திருமுல்லைவாசல் அம்பேத்கா் நகரை சோ்ந்த மதியழகன் மகன் ராஜ்குமாா் (24) சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்தது கண்டறியப்பட்டது, அவா் விற்பனைக்கு வைத்திருந்த புதுச்சேரி மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டாா்.
ராஜ்குமாா் மீது ஏற்கெனவே சீா்காழி காவல் நிலையத்தில் 3 மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவா் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாலும், அவா்மீது தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவின்படி ராஜ்குமாா் கடலூா் மத்திய சிறையில் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த 20 போ், திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 3 போ், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 9 போ், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட ஒருவா் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 2 போ் என மொத்தம் 35 போ்மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.