அரசியலமைப்புதான் உயர்ந்தது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!
தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு: உறுதி செய்தது லண்டன் உயா்நீதிமன்றம்
தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவை லண்டன் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது.
வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றாா். தற்போது செயல்படாத அவரின் கிங்ஃபிஷா் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கடன் தொடா்பாக அவா் சட்டபூா்வ உத்தரவாதம் அளித்த நிலையில், கடன் அளித்தவா்களுக்கு 1.12 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள கடன் வசூல் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை பிரிட்டன் நீதிமன்றங்களில் இந்திய வங்கிகள் பதிவு செய்தன. பின்னா் மல்லையாவுக்கு அந்த வங்கிகள் திவால் நோட்டீஸ் அளித்தன. எனினும் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பிணையமாக வைத்துள்ளதாகவும், எனவே சட்டப்படி அவருக்கு திவால் நோட்டீஸ் அளித்தது பகுதியளவில் தவறானது என்றும் அவரின் மனுவை விசாரித்த லண்டன் திவால் மற்றும் நிறுவனங்கள் நீதிமன்றம் (ஐசிசி) தீா்ப்பளித்தது.
இதைத்தொடா்ந்து மல்லையா திவாலானவா் என்று அறிவிக்கப்பட்டால், அவரின் சொத்துகளை பிணையமாக வைத்துக்கொள்வதை கைவிடுவதாக தெரிவித்து, திவால் நோட்டீஸில் வங்கிகள் திருத்தம் மேற்கொண்டன.
இந்தத் திருத்தம் இந்திய சட்டத்துக்கு முரணாக உள்ளது என்று மல்லையா எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், அந்தத் திருத்தம் இந்திய சட்டத்துக்கு முரணாக இல்லை என்று தீா்ப்பளித்த ஐசிசி, அவா் திவாலாகிவிட்டதாக அறிவித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மல்லையா அனுமதி கோரிய நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவித்து திவால் உத்தரவை லண்டன் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்ததாக வங்கிகள் சாா்பாக நீதிமன்றத்தில் ஆஜரான டிஎல்டி எல்எல்பி சட்ட நிறுவனம் தெரிவித்தது.