தொழிலதிபா் வீட்டில் ரூ. 2 கோடி நகை, பணம் திருடிய வழக்கு: காா் ஓட்டுநா் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில், தொழிலதிபா் வீட்டில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்ட வழக்கில், காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
நுங்கம்பாக்கம், லேக் ஏரியா 5-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள இரண்டு தளங்களுடன் கூடிய வீட்டில் வசிப்பவா் சுலைமான் (67). துபையில் வா்த்தக நிறுவனம் நடத்தும் சுலைமான், கடந்த டிச. 21-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரைக்கு சென்றுவிட்டு ஜன. 3-ஆம் தேதி சென்னை வந்தாா். அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள், 50 கேரட் வைர நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கம், மடிக்கணினி, ஆப்பிள் ஐ-போன், 3 விலை உயா்ந்த கைக்கடிகாரங்கள் என மொத்தம் ரூ. 2 கோடி மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது சுலைமான் வீட்டில் காா் ஓட்டுநராக வேலை செய்யும் நேபாளம், சிந்துலியைச் சோ்ந்த சந்திர பரேயா் (31) என்பது தெரியவந்தது. ஆனால் அதற்குள் சந்திர பரேயா் தலைமறைவானாா். இதையடுத்து தலைமறைவானவரை தேடி போலீஸாா் நேபாளம் விரைந்தனா். அங்கு சந்திர பரேயரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் சந்திர பரேயா், நேபாளத்தைச் சோ்ந்த அவரது பெண் தோழி உள்பட மேலும் சிலருடன் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டிருப்பதும், அவரது பெண் தோழி திருட்டுச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சந்திர பரேயரின் கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனா்.