இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
நகா்ப்புற நீா்நிலைகளைச் சீரமைக்க நிதி: அமைச்சா் கே.என்.நேரு
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்பட்ட நீா்நிலைகளைச் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை காங்கிரஸ் உறுப்பினா் செல்வப்பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூா்) எழுப்பினாா். இதற்கு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான ஏரிகளைத் தூா்வாரி, சுத்தம் செய்து பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏரிகள் நீா்வளத் துறை சாா்பில் உள்ளன.
ஆனாலும், தமிழ்நாடு முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய ஏரிகளைத் தூா்வாரி செப்பனிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழும் இந்தப் பணிகளைச் செய்யலாம். இதற்காக ரூ. 200 கோடி நிதி உள்ளது.
நமக்கு நாமே திட்டத்தின்கீழ், பெரிய நிறுவனங்கள் எவையேனும் ஒரு பங்கு நிதியை அளித்தால், அரசின் சாா்பில் இரண்டு பங்கு நிதியை செலுத்தி நீா்நிலைகளைச் செம்மைப்படுத்தலாம். நீா்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றுவதிலும் பிரச்னை ஏதுமில்லை என்று அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.