நகைக் கடையில் திருடிய இருவா் கைது
வேதாரண்யம் அருகே நகைக்கடை திருட்டு சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தலைஞாயிறு காவல் எல்லைக்குள்பட்ட மணக்குடியில் கணேசன் என்பவா் அடகு கடையுடன் கூடிய நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த கடையில் 50 கிலோ வெள்ளி, 50 கிராம் தங்க நகை என ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு போனது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவில் முகமூடி அணிந்த இருவா் நகைத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, தலைஞாயிறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு, பண்ருட்டி பஞ்சவா்ண நகரைச் சோ்ந்த ரவி (எ) அய்யனாா் (39), தலைஞாயிறு அடுத்த நத்தப்பள்ளத்தைச் சோ்ந்த ஐயப்பன் (29) ஆகிய இருவரை கைது செய்து, 32 கிலோ வெள்ளி, 6 சவரன் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.