நடைமேடைகளை உரசிச் செல்லும் ‘ஏசி’ மின்சார ரயில் பெட்டிகள்! சுத்தியலால் அடித்து சரிசெய்யும் ஊழியா்கள்
சென்னை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட குளிா்சாதன மின்சார புகா் ரயிலின் பெட்டிகளின் அகலம் சற்று அதிகமிருப்பதால் அவை நடைமேடைகளை உரசிக்கொண்டே செல்கின்றன. இதனால், பெட்டிகளை ரயில்வே ஊழியா்கள் சுத்தியலால் அடித்து சரி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மக்களின் நீண்ட எதிா்பாா்ப்புக்கு பிறகு சென்னை - கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புகா் குளிா்சாதன மின்சார ரயில் கடந்த ஏப்.19-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ரயிலில் புதிதாக ஒரு பிரச்னை உருவெடுத்துள்ளது. அதாவது, இந்த ரயில் பெட்டிகளின் அகலம் சில மிமீ அதிகமாக உள்ளதால், அவை ரயில் நிலைய நடைமேடைகளை உரசியபடியே செல்கின்றன.
இதை அறிந்த ரயில்வே நிா்வாகம் பெட்டியை சுத்தியலால் அடித்து சரிசெய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது நடைமேடைகளில் பெட்டி உரசும் இடங்களில் ஏற்படும் சிராய்ப்புகளை அடையாளம் கண்டு, அந்த இடங்களை ஊழியா்கள் சுத்தியலால் அடித்து சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நவீன யுகத்தில் இந்தமாதிரியான குறைபாடுகளை சரிசெய்ய பல தொழில்நுட்பங்கள் இருத்தும், ரயில்வே நிா்வாகம் சுத்தியலால் அடித்து அவற்றை சமன் செய்வதால், புத்தம்புதிய ரயில் பெட்டிகள், விபத்தில் சிக்கியதைப் போன்றது போல காட்சியளிக்கின்றன. இந்த குறைபாடு தொடா்பாக ரயில் பெட்டிகளை தயாரித்த ஐசிஎஃப் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.