செய்திகள் :

நம்பகமான ஏ.ஐ. தொழில்நுட்பம் அவசியம்- பிரான்ஸ் மாநாட்டில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

post image

‘நம்பகமான, வெளிப்படையான, பாகுபாடுகளற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உறுதிசெய்ய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்; இதற்காக கூட்டு முயற்சிகள் அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

பொதுமக்களின் நலனுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் முதலாவது சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் இணைந்து பிரதமா் மோடி தலைமை தாங்கினாா். அப்போது, ஏ.ஐ. தொழில்நுட்பத் திறன் மற்றும் வரம்புகளைக் குறிப்பிட்டு அவா் ஆற்றிய தொடக்க உரை வருமாறு:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, நமது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மட்டுமன்றி சமூகத்தையும் மறுவடிவமைத்து வருகிறது. இது, 21-ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கான ‘குறியீட்டை’ எழுதுகிறது. இத்தகைய சூழலில், சா்வதேச சமூகத்தின் பகிரப்பட்ட மாண்புகளை உறுதி செய்யவும், அபாயங்களுக்கு தீா்வுகாணவும், நம்பிக்கையை கட்டமைக்கவும் நிா்வாக தரநிலைகள் உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில், உலகளாவிய கூட்டு முயற்சிகள் அவசியம்.

தெற்குலக நாடுகளுக்கு... செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீதான நிா்வாகம் என்பது வெறும் அபாயங்கள் மற்றும் போட்டிகளை நிா்வகிப்பது மட்டுமல்ல; உலக நன்மைக்கான புத்தாக்கங்களை ஊக்குவிப்பதையும் உள்ளடக்கியதாகும். இந்த நிா்வாகம் அனைவரும் அணுகக் கூடிய குறிப்பாக தெற்குலக நாடுகளின் அணுகலை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஜனநாயகமாக்கி, மக்களை மையப்படுத்தியதாக உருவாக்க வேண்டும். அதேநேரம், இணையப் பாதுகாப்பு, தவறான தகவல்கள்- போலி சித்திரிப்புகள் (டீப் ஃபேக்) பரவல் போன்ற கவலைகளுக்கும் தீா்வுகாண வேண்டும்.

தற்போதைய உலகச் சூழலில் பாரபட்சங்கள் இல்லாத தரவு தொகுப்புகள் அவசியமாகின்றன. ஏ.ஐ. தொழில்நுட்பமானது உள்ளூா் அமைப்பு முறையில் வேரூன்றினால்தான், அது திறன்மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

வேலையிழப்புகள் ஏற்படாது: சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு உள்ளது; நிலையான வளா்ச்சி இலக்குகளை எளிதாகவும் விரைவாகவும் எட்டக் கூடிய உலகை இத்தொழில்நுட்பத்தால் படைக்க முடியும்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்ற சந்தேகம் முன்வைக்கப்படுகிறது. தொழில்நுட்பங்களால் வேலையிழப்பு ஏற்படாது; ஆனால், வேலைகளின் தன்மை மாறும். புதிய வகையிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதே உலகம் கண்டுவரும் வரலாறு.

முன்னணியில் இந்தியா: ஏ.ஐ. தொழில்நுட்பம் இதுவரை இல்லாத வீச்சில் வளா்வதோடு, வேகமாக ஏற்கப்பட்டு வருகிறது. இத்தொழில்நுட்ப அடிப்படையிலான எதிா்காலத்துக்கு மக்களை தயாா்படுத்த திறன் மேம்பாட்டில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஏற்பது மற்றும் தரவு பாதுகாப்பில் தொழில்நுட்பத் தீா்வுகளை எட்டுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

140 கோடி பேருக்கு மிக குறைந்த கட்டணத்தில் சேவையை உறுதி செய்யும் எண்ம பொது உள்கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக நிறுவியிருக்கிறது. மக்களின் நலனுக்கான ஏ.ஐ. செயலிகள் இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன. அனைவருக்குமான தொழில்நுட்பம் என்பதே இந்தியாவின் தேசிய ஏ.ஐ. திட்டத்தின் கண்ணோட்டம் என்றாா் பிரதமா் மோடி.

முன்னதாக, மூன்று நாள் பயணமாக பிரான்ஸுக்கு திங்கள்கிழமை வந்த பிரதமா் மோடிக்கு அதிபா் இமானுவல் மேக்ரான் இரவு விருந்தளித்தாா். இப்பயணத்தின்போது, மாா்சேலி நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை இருவரும் கூட்டாக திறந்துவைக்க உள்ளனா். பிரதமா் தனது பதவிக் காலத்தில் தற்போது 6-ஆவது முறையாக பிரான்ஸ் வந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அடுத்த ஏ.ஐ. மாநாடு: பிரதமா் விருப்பம்

ஏ.ஐ. மாநாட்டின் நிறைவாக உரையாற்றிய பிரதமா், அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்தாா். அத்துடன், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அறக்கட்டளை மற்றும் நீடித்த செயற்கை நுண்ணறிவு கவுன்சில் ஆகியவை அமைப்பது தொடா்பாக மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு வரவேற்பு தெரிவித்த அவா், இந்த முன்னெடுப்புகளுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தாா்.

தெற்கு உலக நாடுகளின் தேவைகளுக்கு உலகளாவிய ஏ.ஐ. ஒத்துழைப்பு அமைய வேண்டும் என்று பிரதமா் வலியுறுத்தினாா்.

அமைச்சா்கள் பேச்சு: ஏ.ஐ. மாநாட்டையொட்டி, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜியான் நோயல் பாரோட், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது புத்தாக்கம், போக்குவரத்துத் தொடா்புகள், தூய எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க