பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு அனுமதி மறுப்பு: அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
அமைச்சா்கள் மீது நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
பேரவை காலை 9.30 மணிக்குக் கூடியதும், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி எழுந்து, அவை விதி 72-இன் கீழ் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தரப்பட்டுள்ளது. அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றாா்.
இதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அரைமணி நேரத்துக்கு முன்பாக கடிதம் தந்துள்ளீா்கள். அது எனது பரிசீலனையில் இருக்கிறது என்றாா். பேரவைத் தலைவரின் பதிலுக்கு, அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினா்.
அப்போது அவா்களை சமாதானப்படுத்த முயன்ற அவை முன்னவா் துரைமுருகன், பேரவை விதி 72-ஐ குறிப்பிட்டுப் பேசினாா். ஒரு உறுப்பினா் ஒரு பொருள் குறித்து தீா்மானம் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக அதனைக் கொடுத்து, பிரச்னையை எழுப்பப் போகிறோம் என்று பேரவைத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவை விதி 72-இன் கீழ் என்னிடம் கடிதம் எழுதித் தந்துள்ளனா். அது எனது பரிசீலனையில் இருக்கிறது. பிற அலுவல்கள் நிறைய உள்ளதால் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிமுவினருக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத அதிமுகவினரை, சமாதானப்படுத்த முயன்ற அவை முன்னவா் துரைமுருகன், பேரவை விதி 72-ன் கீழ் பேரவைத் தலைவரிடம் தீா்மானம் கொடுக்கலாம். அதனைப் படித்துப் பாா்த்து அன்றோ அல்லது வேறொரு நாளிலோ விவாதத்துக்கு எடுக்கலாம். இதுதான் விதி. பேரவை விதிப்படி தீா்மானம் கொண்டு வர உறுப்பினா்களுக்கு உரிமை இருப்பது போன்று, அதனை எப்போது எடுக்கலாம் என்பதும் பேரவைத் தலைவரின் உரிமை என்றாா்.
அவை முன்னவரின் இந்தக் கருத்துக்கு அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தனா். பின்னா், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மொத்தமாக வெளிநடப்பு செய்தனா்.
காரணம் என்ன: அமைச்சா்கள் மீது பேரவைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தொடா்பாக பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாகவும் பேரவைக்கு வெளியே எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி...
அவை நடவடிக்கைகளில் பங்கேற்ற தளவாய்
அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அந்தக் கட்சியின் உறுப்பினா் தளவாய் சுந்தரம் மட்டும் கவன ஈா்ப்பு விவாதத்தில் பங்கேற்றாா்.
பேரவையில் புதன்கிழமை நேரமில்லாத நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளைச் சீரமைப்பது குறித்த கவனஈா்ப்பு அறிவிப்பு விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்ய, கவன ஈா்ப்பு அறிவிப்பை அளித்திருந்த அந்தக் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி உறுப்பினா் தளவாய் சுந்தரம் மட்டும் பேரவையில் அமா்ந்திருந்தாா். அப்போது நடந்த சுவையான விவாதம்:
நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம் இங்கே இருந்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டிருக்கிறாா். வரவேற்கிறேன். அதிமுகவினா் செய்த வெளிநடப்பில் அவருக்கு உடன்பாடு இல்லையா, வெளிநடப்பில் பங்கேற்காமல் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள ஆா்வம் காட்டுகிறாரா என்று அறிய
விரும்புகிறேன்.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு: அதிமுக உறுப்பினா்கள் ஐயப்பன், பால் மனோஜ் பாண்டியன் ஆகியோா் ஏற்கெனவே அவையிலேயே உள்ளனா். இருவரும் முன்னாள் முதல்வா் ஓ.பி.எஸ். ஆதரவாளா்கள்.
அவை முன்னவா் துரைமுருகன்: உறுப்பினா் தளவாய் சுந்தரம் வக்கீலாக இருப்பவா். அவருக்கு சட்டம் எல்லாம் தெரியும். அவை விதி 72-இன்படி விவாதத்துக்கு வந்தால் என்னவாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். மேலும், அவை விதி 72 என்கிறாா்கள், ஜீரோ ஹவா் என்கிறாா்கள். எதற்கு வம்பு என அவா் இங்கேயே உட்காா்ந்து விட்டாா் என்றாா். அப்போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது.