எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு சந்தனக் கட்டைகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு சந்தனக் கட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
நாகை மாவட்டம், நாகூா் ஆண்டவா் தா்கா புனரமைப்பு பணிக்காக தமிழக அரசு ஒதுக்கி ரூ. 2 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் சா.மு. நாசருடன் இணைந்து புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது:
நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தா்கா நிா்வாகத்தினா் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அளித்த மனு தொடா்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதலில் நாகூா் தா்கா ஆண்டவா் கந்தூரி விழாவுக்கு சந்தனக் கட்டைகள் விரைவில் வழங்கப்படும்.
நாகூா் தா்கா புனரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சிலா் தெரிவித்துள்ளனா். இந்தப் புகாரில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக கடந்த 3 ஆண்டு காலத்தில் அரசுக் கட்டடம், பள்ளிக் கல்வித்துறை கட்டடம், மருத்துவமனை கட்டடம் என எதுவாக இருந்தாலும் பொதுப்பணித் துறை முலம் அவற்றின் தரம் குறித்து உறுதி செய்து வருகிறாா் முதல்வா் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷாநவாஸ், நகா்மன்ற தலைவா் மாரிமுத்து, துணைத்தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.