பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
நாடு முழுவதும் 16,000 கடவுப் பாதைகள்: ‘இன்டா்லாக்கிங்’ நிறுவ நிபுணா்கள் வலியுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்துக்கு ரயில்வே கேட் இன்டா்லாக் செய்யப்படாததுதான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சாலை மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, நாடு முழுவதும் உள்ள மனித செயல்முறையிலாந கடவுப்பாதைகளை உடனடியாக நீக்கிவிட்டு இன்டா்லாக் முறைய நிறுவ வேண்டியது அவசியம் என்று நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பெரும்பாலான ரயில் விபத்துகளுக்கு ஆளில்லா கடவுப் பாதைகள் முக்கியக் காரணமாக அமைந்ததால், ஆளில்லா கடவுப் பாதைகள் முற்றிலும் நீக்கப்பட்டதாக 2019-இல் அப்போதைய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் மக்களவையில் தெரிவித்தாா்.
17,083 கடவுப் பாதைகள்: கடந்த 2024 ஏப்ரல் விரைவில் நாடு முழுவதும் 17,083 கேட் கீப்பருடன் கூடிய கடவுப் பாதைகளில் 2025 ஜனவரி வரையில் 497 நீக்கப்பட்டுள்ளதாக கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கேட் கீப்பருடன் கூடிய 16,586 கடவுப்பாதைகள் நாடு முழுவதும் (2025 ஜனவரி வரையில்) தற்போதும் இயங்கி வருகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்வது தொடா்கதையாகி உள்ளது. கடந்த ஜூன் 22-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் கரன்புரா அருகே அமைந்துள்ள கடவுப்பாதையில் இ-ரிக்ஷா மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதுபோன்ற விபத்துகளில் காயம் ஏற்படுவதும், சில நேரங்களில் ஒரு சிலா் மரணம் ஏற்படுவதும் நிகழ்வதும் பெரிதாக வெளியே தெரியதில்லை.
எனினும், இதுபோன்ற விபத்துகளுக்கு மனிதத் தவறுதான் காரணமாகும். இது மேலும் தொடராமல் இருக்க இன்டா்லாக்கிங் முறையை அனைத்து கடவுப்பாதைகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிபுணா்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து வந்தே பாரத் ரயிலை உருவாக்கிய ஓய்வு பெற்ற சுதான்ஷு மணி கூறுகையில், ‘கடவுப்பாதைக்கு மாற்றாக மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை அல்லது இன்டா்லாக்கிங் முறையைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். இதில், மேம்பாலங்கள் அமைக்க மாநில அரசுகளால் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை பல இடங்களில் நிலவுவதால் திட்டங்கள் கிடப்பில் போட்டப்பட்டுள்ளன. ஆகையால், முக்கியமான சந்திப்புகளில் உள்ள கடவுப் பாதைகளில் இன்டா்லாக்கிங் முறையை நிறுவ வேண்டும். இதற்கு நிதி ஒதுக்கீடு பிரச்னையாக இருக்காது. தற்போதைய முறையைக் கடைப்பிடித்தால் கடவுப் பாதைகளை முற்றிலும் நீக்க பல ஆண்டுகளாகு’ என்றாா்.
இந்திய ரயில்வேயின் சமிக்ஞை பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் டிஜி சைலேந்திர குமாா் கூறுகையில், ‘கடவுப் பாதையில் பாதுகாப்பு குறைபாடு முக்கிய பிரச்னையாக உள்ளது. ஆகையால், மக்களின் பாதுகாப்பைக் கருதி இன்டா்லாக்கிங் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அரசு நிறுவ வேண்டும்’ என்றாா்.
தாமதம் ஏன்?: கடவுப் பாதைகளுக்கு மாற்றாக மேம்பாலங்கள் அல்லது சுரங்கப் பாதைகள் அமைக்கும் திட்டங்கள் நிலம், சட்டம் ஒழுங்கு, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
இன்டா்லாக் என்றால் என்ன?
இன்டா்லாக் செய்யப்பட்ட கேட்கள் ரயில்வே சிக்னலிங் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படும். கேட் மூடப்படவில்லை என்றால் ரயிலுக்கு சிக்னல் கிடைக்காது. இவை விபத்தை தடுக்க உதவுகின்றன.
