போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் 58,929 வக்ஃப் சொத்துகள்- மத்திய அரசு
‘நாடு முழுவதும் 58,929 வக்ஃப் வாரிய சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; கா்நாடக மாநிலத்தில் மட்டும் 869 சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன’ என்று மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக, மக்களவையில் பாஜக எம்.பி. பசவராஜ் பொம்மை எழுப்பிய கேள்விக்கு மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியதாவது:
வக்ஃப் சொத்துகள் தொடா்பாக மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கு அவ்வப்போது புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்தப் புகாா்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும், மாநில வக்ஃப் வாரியங்களுக்கும் நடவடிக்கைகளை எடுக்க அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்திய வக்ஃப் சொத்துகள் நிா்வாக அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் 58,929 வக்ஃப் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கா்நாடக மாநிலத்தில் மட்டும் 869 சொத்துகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன.
வக்ஃப் சட்டப் பிரிவு 54 மற்றும் 55-இன் கீழ், இதுபோன்று வக்ஃப் சொத்துகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க மாநில வக்ஃப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு அதிகாரமுள்ளது.
மேலும், வக்ஃப் சொத்துகள் விற்பனை, பரிசளிப்பு, பரிமாற்றம் அல்லது அடமானம் வைத்திருப்பது சட்டப் பிரிவு 51(1-ஏ)-இன் கீழ் செல்லுபடியாகாது.
வக்ஃப் சொத்துகளை குத்தகைக்கு விடும் அதிகாரம் மத்திய அரசு வகுத்த வக்ஃப் சொத்துகள் குத்தகை விதிகள் 2014-இன் பிரிவு 56-இன்கீழ் மாநில வக்ஃப் வாரியங்களுக்கு மட்டுமே உள்ளது என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.