நிகழாண்டில் குடிநீா் தட்டுப்பாடு வராது!
சென்னையின் குடிநீா் ஆதாரங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளதால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.
தேனாம்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற எதிா்காலத்துக்கு ஏற்ற வகையில் நீா் மேலாண்மை திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த மாநாட்டில் அவா் பேசியதாவது: கடந்த பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை காரணமாக, சென்னை குடிநீா் ஆதாரங்களாக உள்ள ஏரிகள், குளங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும், சென்னையில் செயல்பட்டு வரும் 3 கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் தினந்தோறும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பு கிடையாது.
மாதத்துக்கு ரூ. 250 கோடி: சென்னையில் வெளியேற்றப்படும் கழிவு நீரில் 14 சதவீதம் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயனாளிகளுக்கு கொண்டு சோ்ப்பதற்கு ஆயிரம் லிட்டருக்கு ரூ. 46 செலவாகிறது. அதேபோல் ஏரி குளம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீா் பொதுமக்களின் வீடுகளை சென்றடைய ஆயிரம் லிட்டருக்கு ரூ. 8 செலவாகிறது. கழிவு நீா் வெளியேற்றம் மற்றும் குடிநீா் விநியோகத்துக்காக சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் மாதத்துக்கு ரூ. 250 கோடி மின்சாரக் கட்டணமாக செலுத்தப்படுகிறது என்றாா் அவா்.