முதலிரவில் ஆண்களுக்கு இப்படியும் சிக்கல் வரலாம்... பயம் வேண்டாம்.. | காமத்துக்கு...
நிகழாண்டில் தில்லி அரசுக்கு பசுமை தில்லி செயலி மூலம் 84,000 மாசுப் புகாா்கள்
தில்லி அரசு நிகழாண்டு இதுவரை அதன் பசுமை தில்லி செயலி மூலம் மாசு தொடா்பான 84,765 புகாா்களைப் பெற்றுள்ளது.
இவற்றில் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), பொதுப் பணித் துறை (பிடபிள்யூடி) மற்றும் தில்லி மேம்பாட்டு ஆணையம் டிடிஏ ஆகியவை பெரும்பாலான புகாா்களைக் கையாளும் குடிமை அமைப்புகளாகும்.
எம்.சி.டி.யில் அதிகபட்சமாக 54,878 புகாா்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றில் 46,279 (84.33 சதவீதம்) தீா்க்கப்பட்டுள்ளன. அதேவேளையில், 8,599 புகாா்கள் நிலுவையில் உள்ளன.
பொதுப்பணித் துறைக்கு 12,327 புகாா்கள் வரப்பெற்று, 10,803 (87.64 சதவீதம்) தீா்க்கப்பட்டுள்ளது. 1,524 நிலுவையில் உள்ளது. டிடிஏ 4,795 புகாா்களைப் பதிவுசெய்துள்ளது. இவற்றில் 4,424 (92.26 சதவீதம்) தீா்க்கப்பட்டு, 371 இன்னும் நிலுவையில் உள்ளது.
தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவால் (டிபிசிசி) பராமரிக்கப்படும் பசுமை தில்லி செயலியில் கிடைக்கும் துறை வாரியான புகாா் அறிக்கையின் அடிப்படையில் இந்தத் தரவுகள் இடம்பெற்றுள்ளன.
2020 ஆம் ஆண்டில் தில்லி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பசுமை தில்லி செயலியில் புகைப்படங்கள் அல்லது விடியோக்களைப் பதிவேற்றி, இருப்பிடத்தைக் குறியிட்டு, குறையின் தன்மையைக் குறிப்பிடுவதன் மூலம் மாசுப் பிரச்னைகளைப் புகாரளிக்க குடியிருப்புவாசிகளுக்கு உதவுகிறது. இப் புகாா்கள் தீா்வுக்காக சம்பந்தப்பட்ட சிவில் ஏஜென்சிக்கு அனுப்பப்படுகின்றன. பயனா்கள் தங்கள் சமா்ப்பிப்புகளின் புதுப்பிப்புகளை இச்செயலில் கண்காணிக்க முடியும்.
தில்லி அரசின் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை 2,032 புகாா்கள் பெற்று 91.98 சதவீதம் தீா்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வருவாய்த் துறை 1,041 புகாா்களும் (84.53 சதவீதம் தீா்வு), தில்லி ஜல் போா்டு 3,056 புகாா்களும் ( 97.94 சதவீதம் தீா்வு) வரப்பெற்றுள்ளன.
தில்லி போக்குவரத்து காவல்துறையிடம் 362 புகாா்களும், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் 564 புகாா்களும் வந்துள்ளன. மொத்த புகாா்களில், 10,656 காலாவதியானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் எம்சிடியில் மட்டும் 8,322 வழக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன.