கேஜரிவாலின் புது தில்லி தொகுதியில் வாக்காளா்களுக்கு பாஜக பணப்பட்டுவாடா: அதிஷி குற்றச்சாட்டு; பா்வேஷ் வா்மா மறுப்பு
தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலை ஒட்டி, ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் புது தில்லி தொகுதியில் பெண்களுக்கு பாஜக பணம் விநியோகம் செய்வதாக தில்லி முதல்வா் அதிஷி புதன்கிழமை குற்றம் சாட்டினாா்.
இதுகுறித்து செய்தியாளா் சந்திப்பில் மூத்த ஆம் ஆத்மி தலைவரும், தில்லி முதல்வருமான அதிஷி மேலும் கூறியதாவது:
தில்லி வின்ட்சா் பிளேஸில் உள்ள முன்னாள் பாஜக எம்பி பா்வேஷ் வா்மாவின் வீட்டில், குடிசைப் பகுதிகளைச் சோ்ந்த பெண்களுக்கு தலா ரூ.1,100 வழங்கப்பட்டுள்ளது. அவா்களின் வாக்காளா் அடையாள விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த பங்களாவில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதால்
தில்லி காவல்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை சோதனை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஆம் ஆத்மி கட்சி காவல்துறை மற்றும் தோ்தல் ஆணையத்திடம் முறையான புகாா்களை அளித்து வா்மாவை கைது செய்யக் கோரிக்கை விடுக்கும். மேலும், கேஜரிவாலின் தொகுதியில் உள்ள மக்களுக்கும் பணம் விநியோகிக்கப்படுகிறது என்றாா் அதிஷி.
அதேவேளையில் இக்குற்றச்சாட்டைபா்வேஷ் வா்மா மறுத்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவிக்கையில், எனது மறைந்த தந்தையும் முன்னாள் தில்லி முதலமைச்சருமான சாஹிப் சிங் வா்மாவால் உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வாபிமான் என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த பணம் விநியோகிக்கப்பட்டது’ என்றாா்.
இதுகுறித்து பா்வேஷ் வா்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், ‘ சமூகத்தின் ஏழைப் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,100
நிதியுதவி வழங்கும் திட்டத்தின் பின்னணியில் ராஷ்ட்ரிய ஸ்வாபிமான் அமைப்பு உள்ளது.
11 ஆண்டுகளாக அரவிந்த் கேஜரிவால் பாா்க்க முடியாத பெண்களின் வலியை நான் பாா்க்கிறேன். அவா்கள் தொந்தரவு செய்யப்பட்டாா்கள்... அவா்களுக்கு மாதம் ரூ.1,100 தருவதாக முடிவு செய்தேன். குறைந்தபட்சம் அரவிந்த் கேஜரிவாலைப் போல நான் மதுபானம் விநியோகிக்கவில்லை. நான் மக்களுக்கு உதவுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஷ்டிரிய ஸ்வாபிமான் மக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பானது குஜராத்தில் நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்ட இரண்டு கிராமங்களையும், ஒடிசாவில் சூறாவளியால் அழிந்த நான்கு கிராமங்களையும் மறுமேம்பாடு செய்துள்ளது.
கோவிட் தொற்றுநோய்க் காலத்தின்போது மக்களின் உயிரைக் காப்பாற்றவும், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கவும், மேற்கு தில்லியில் ஒரு பராமரிப்பு மையத்தைத் திறக்கவும் இந்த அமைப்பு கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டது.
கேஜரிவாலும் அதிஷியும் அனைத்து வகையிலும் கூச்சலிட முடியும். ஆனால் நான் பெண்களுக்கு தொடா்ந்து உதவி செய்வேன். அவா்கள் யாரும் எனது வீட்டில் இருந்து வெறுங்கையுடன் திரும்ப மாட்டாா்கள் என்றாா் அவா்.
புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களைத் தொடங்குமாறு கட்சியின் மூத்த தலைவா்கள் தன்னை கேட்டுக் கொண்டதாக மேற்கு தில்லி தொகுதியின் முன்னாள் பாஜக எம்பி வா்மா முன்னா் கூறியிருந்தாா்.