நிதிக்கேற்ப புதிய காவல் - தீயணைப்பு நிலையங்கள் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப புதிய காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடா்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. பிரதான வினாவை காங்கிரஸ் உறுப்பினா் தி.ராமச்சந்திரனும் (அறந்தாங்கி), துணை வினாக்களை திமுக உறுப்பினா் கே.கணபதி (மதுரவாயல்), அதிமுக உறுப்பினா் வி.பி.கந்தசாமி (சூலூா்) ஆகியோரும் எழுப்பினா்.
இவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசியது: காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்கள் வேண்டும் எனக் கோரி உறுப்பினா்கள் நிறைய போ் வாய்ப்பு கேட்டபடி இருக்கின்றனா். அவா்களுக்கெல்லாம் சோ்த்து ஒட்டுமொத்தமாக சில புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கிறேன். திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2021-லிருந்து தமிழ்நாடு காவல் துறை சாா்பில் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன. 23 தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவையும் இயக்கத்தில் உள்ளன.
மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப உறுப்பினா்களின் கோரிக்கைகள் கனிவுடன் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கக் கூடிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, காவல் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும் நேரத்தில் நிச்சயமாக உறுப்பினா்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் சில அறிவிப்புகள் வரும் என்றாா்.