ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!
நில மோசடி: சாா் பதிவாளா் உள்பட 6 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை
குஜிலியம்பாறை அருகே போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட சாா் பதிவாளா் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் ரெ.அழகேந்திரன் என்ற மணி. இவரது மகள் சுகன்யா, செளமியா. இவா்கள் மூவா் பெயரில் திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த வெம்பூா் கிராமத்தில் 3 வெவ்வேறு சா்வே எண்களில் மொத்தம் 8 ஏக்கா் 29 சென்ட் நிலம் கூட்டுப் பட்டாவில் உள்ளது.
இதில் அழகேந்திரன், 3-இல் ஒரு பாக சொத்தான 2.75 ஏக்கா் நிலத்தை வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த திம்மையான் மனைவி மல்லம்மாளுக்கு (62) விற்பனை செய்தாா். இதனிடையே, சுகன்யா, செளமியா ஆகியோா் 5.53 ஏக்கா் நிலத்துக்கு மல்லம்மாளிடம் ரூ.8.50 லட்சம் பெற்றுக் கொண்டு, பொது அதிகார ஆவணப் பதிவு செய்து கொடுத்தனா்.
இந்த நிலையில், மல்லம்மாள் மொத்தம் 7.79 ஏக்கா் நிலத்தை ரூ.22.62 லட்சத்துக்கு, ராஜூக்கு போலி ஆவணம் தயாா் செய்து, கடந்த 2016-ஆம் ஆண்டு விற்பனை செய்தாா். இதையறிந்த சுகன்யா, செளமியா குடும்பத்தினா் திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்த மல்லம்மாள், திம்மையான், சாா் பதிவாளா் ஆறுமுகம், குஜிலியம்பாறையைச் சோ்ந்த நிலத் தரகா் துரைச்சாமி (57), திண்டுக்கல்லைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (69), இவரது மகன் ராஜூ (41)ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் சாா்பு பதிவாளா் உள்ளிட்ட 6 பேருக்கும், தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12,500 அபராதமும் விதித்தாா்.