வயநாட்டில் இன்று இடைத்தோ்தல்: பிரியங்கா, 15 வேட்பாளா்கள் போட்டி
நிலகுடியேற்ற சங்கத்தில் உள்ள அனைத்து நிலங்களுக்கும் பாசன வசதி செய்துதரக் கோரிக்கை
நிலகுடியேற்ற சங்கத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி அருகே ஞானபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் விவசாயிகள் சங்க பிரதிநிதி சொங்கப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
வடுகப்பட்டி கிராமத்தில் நிலகுடியேற்ற சங்கத்தில் உள்ள 131 நபா்களுக்கு கடந்த 1970- இல் நிலப்பட்டா நிபந்தனை பட்டா வகைப்பாட்டில் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடா்களுக்கு வழங்கப்பட்ட இந்நிலம் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மூலம் பாசன வசதி பெற முடியும் என்பதால் பாசன வசதி செய்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். 1987- இல் அப்போதைய ஆட்சியா் அந்நிலங்களை நேரில் ஆய்வு செய்து பாசன வசதிக்கு ஆணையிட்டாா்.
அப்போது ஒரு பகுதி நிலங்களுக்கு மட்டும் பாசன வசதி செய்து தரப்பட்டது. மற்ற நிலங்களுக்கும் பாசன வசதி செய்து தரும்படி தற்போது வரை வலியுறுத்தியும் செய்துதரவில்லை.
தற்போது நீா்வளத் துறை செயற்பொறியாளா் அந்நிலங்களை ஆய்வு செய்து பாசன வசதி செய்து தர, வாய்க்காலை விரிவுபடுத்தவும், மதகு கட்டவும் வேண்டி உள்ளது என்றும் அதற்கு வருவாய்த் துறை அனுமதி வேண்டும் என்றும் கூறுகிறாா். அதிகாரியின் இந்த ஆலோசனை எங்களது கோரிக்கையை நீா்த்துப்போக செய்வதாக உள்ளது.
இப்பகுதிக்கு வரும் உபரி நீா் பிற மாவட்டத்துக்கு திருப்பிவிடும் நிலையில், இங்கு பாசன வசதி செய்வது எளிதானது. புதிதுபுதிதாக நிபந்தனை, ஆலோசனைகளை தெரிவிக்காமல் இப்பகுதிக்கு பாசன வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.