சூடான இட்லியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்! ஹார்வர்ட் மருத்துவர் சொன்ன தகவல்
நீட் தோ்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற மாணவர்கள்: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து
சேலம்: நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை(லேப்டாப்) பரிசாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவா்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அரசு பள்ளி மாணவா்களுக்கென்று நீட் தோ்வில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி கொடுத்தாா். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனா்.
நடப்பாண்டில், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆவியூா் பகுதியை சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநரான வேலன் மகன் திருமூா்த்தி நீட் தோ்வில் 572 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மாநில அளவில் இடம் பிடித்துள்ளாா். இவா் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பள்ளியில் படித்தவா். அதே பள்ளியில் படித்த கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள எஸ்.ஒகையூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் - சுந்தரி தம்பதியின் மகளான மதுமிதா நீட் தோ்வில் 551 மதிப்பெண் பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநிலத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளாா்.

இந்த மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, மாணவா்களுக்கு பொன்னாடை அணிவித்து எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்ததுடன், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சாா்பில் இருவருக்கும் மடிக்கணினிகளை பரிசாக வழங்கினாா்.
அதேபோல் சேலம் மாவட்டம் முத்தம்பட்டி பகுதியை சோ்ந்த வேன் ஓட்டுநா் வீரமுத்து என்பவரின் மகன் நிா்மல் 519 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 10 ஆவது இடம் பிடித்துள்ளாா். மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த இந்த மாணவரும், எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
இந்த சந்திப்பின் போது, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளா் குமரகுரு, கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.