தஞ்சாவூர் மணிமாறன், நெசவாளர் நவீன் குமாருக்கு பிரதமர் பாராட்டு
35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரரின் சதம்; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஷுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்தைக் காட்டிலும் 311 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் 0 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். கே.எல்.ராகுல் 90 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஷுப்மன் கில் படைத்த சாதனைகள்
இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம் கேப்டன் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கருடன் ஷுப்மன் கில்லும் இணைந்துள்ளார். கடந்த 1947-48 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் டான் பிராட்மேன் 4 சதங்கள் விளாசியிருந்தார். கடந்த 1978-79 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 4 சதங்கள் விளாசியிருந்தார்.
அந்த வரிசையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்கு சதங்கள் விளாசியதன் மூலம் ஷுப்மன் கில்லும் இந்த சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரும் இந்த சாதனையை தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் படைத்த நிலையில், ஷுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இதுவரை எந்த ஒரு கேப்டனும் நான்கு சதங்கள் விளாசியதில்லை. கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் தொடரிலேயே நான்கு சதங்கள் விளாசி தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பாக, கேப்டனாக அறிமுகமான டெஸ்ட் தொடரிலேயே வார்விக் ஆம்ஸ்ட்ராங், டான் பிராட்மேன், கிரேக் சேப்பல், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் 3 சதங்கள் விளாசியதே அதிபட்சமாக இருந்தது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 1990 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் சதம் விளாசியிருந்தார். அதன் பின், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் யாரும் மான்செஸ்டரில் சதம் விளாசியதில்லை. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வீரர் ஷுப்மன் கில் மான்செஸ்டரில் சதம் விளாசி சிறப்பான சாதனையை படைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஷுப்மன் கில்லின் சாதனை மேலும் வலுவடைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷுப் சுழற்சியில் அதிக சதங்கள் விளாசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ரோஹித் சர்மா இதுவரை 9 சதங்கள் (69 இன்னிங்ஸ்களில்) விளாசியுள்ளார். ஷுப்மன் கில் 67 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள் விளாசியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் ஷுப்மன் கில் இதுவரை 722 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குவித்திருந்த 712 ரன்களைக் கடந்து கில் அசத்தியுள்ளார். இந்த தொடரில் இன்னும் கடைசி டெஸ்ட் போட்டி மீதமிருக்கும் நிலையில், டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைக்க ஷுப்மன் கில்லுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த 1971 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 774 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல, கடந்த 1978-79 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 732 ரன்கள் குவித்துள்ளார்.
சுனில் கவாஸ்கரின் இந்த சாதனையை ஷுப்மன் கில் முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை!
Indian captain Shubman Gill has set several records by scoring a century in the second innings of the Manchester Test against England.