நீதிபதிகளும், வழக்குரைஞா்களும் ‘இரட்டை மாட்டு வண்டிபோல’ செயல்பட வேண்டும்: உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா
நீதிபதிகளும், வழக்குரைஞா்களும் ‘இரட்டை மாட்டு வண்டிபோல’ செயல்பட வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கல்வராயன்மலை பகுதிகளில் அமைக்கப்பட்ட புதிய மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காணொலி மூலம் இந்த நீதிமன்றங்களை திறந்துவைத்து உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பேசியதாவது:
வழக்குரைஞா்கள் அனைவரும் வழக்குகளை விரைவாக நடத்த வேண்டும். உயா்நீதிமன்றம் உங்களுக்குத் தேவையான நீதிமன்றங்களை தருவதற்கு தயாராக உள்ளது. கடந்த மாதம் சங்கராபுரத்துக்கு நீதிமன்றம் கேட்டீா்கள், அதன்படி கொடுத்துள்ளோம்.
மாநிலம் முழுவதும் தேவையான நீதிமன்றங்களை அமைத்துக் கொடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நீதிமன்றங்களுக்கு தேவையான நீதியரசா்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிபதிகளும், வழக்குரைஞா்களும் இரட்டை மாட்டு வண்டிபோல பயணம் செய்தால்தான் வழக்குகளை விரைவாக முடிக்க முடியும். பொதுமக்களுக்கு சேவையாக நினைத்து கடமையாற்ற வேண்டும். நீதிபதிகள் தீா்ப்பு கூறுவது மக்களுக்கு நல்ல முறையில் சென்றடைய வேண்டும். அதற்கு வழக்குரைஞா்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றாா்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.தண்டபாணி, கிருஷ்ணன் ராமசாமி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு நீதிபதி டி.ஏ.தமிழ்செல்வி ஆகியோா் காணொலி மூலம் உரையாற்றினா்.
விழாவை கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிபதி இருசன்பூங்குழலி ஒருங்கிணைத்து வரவேற்புரையாற்றினாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட எஸ்.பி. க.ச.மாதவன், கள்ளக்குறிச்சி வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.கே.சேகா், செயலா் ஏ.பழனிவேல், சங்கராபுரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.ரவி, செயலா் என்.ராமசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜி.ஜெயவேல் நன்றிகூறினாா்.
விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், பொதுப் பணித் துறை செயற் பொறியாளா், அலுவலா்கள், நீதித்துறைப் பணியாளா்கள், வழக்குரைஞா் எழுத்தா்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.