கஞ்சா கடத்தல்: 3 போ் கைது; 21.7 கிலோ கஞ்சா பறிமுதல்
தியாகதுருகம் அருகே சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். 21.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
உளுந்தூா்பேட்டை நோக்கி சரக்கு வாகனத்தில் திங்கள்கிழமை கஞ்சா கடத்தப்படுவதாக தியாகதுருகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் அன்று காலை 8 மணியளவில் மாடூா் சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 21 கிலோ 700 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், வாகனத்தை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.
இதில், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவா், ஆத்தூா் வட்டம், பழனியாபுரி கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (28) என்பது தெரியவந்தது.
மாடூா் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் (19) கஞ்சா விற்பனையாளரான இவா், சரக்கு வாகனத்தின் பின்னால் பைக்கில் வந்ததும், 17 வயது சிறுவன் உடன் வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியன், ரஞ்சித் இருவரையும் கைது செய்தனா். மேலும், சிறுவனை கடலூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா். சரக்கு வாகனத்தையும், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.