எழுதும் நிலா- மார்கரெட் அட்வுட்; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 23
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர்கள் ஆஜர்
சென்னை: தலைமைச் செயலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை, தர்மசங்கடமாகவே கருதுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2023 -ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பி இதுகுறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, தற்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, தற்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
தற்போதைய தலைமைச் செயலர் முருகானந்தம் தரப்பில், "கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க கால நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16 -ஆம் தேதி இந்த குழு கூடி, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோருவோரின் பட்டியலை மாநில அளவில் பராமரிப்பது என முடிவு செய்துள்ளதாக" தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தரப்பில், "இதுகுறித்து அரசு பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதை ஏற்றுக்கொண்டு, தற்போதைய தலைமை செயலாளர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
தலைமைச் செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் இந்த நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. மாறாக தர்ம சங்கடமான நிலையாகவே கருதுகிறது.
நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை பிறப்பித்த முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, அதை மீறி இருப்பது துரதிஷ்டவசமானது.
பின்னர் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக அரசு பணியாளர் விதிகளில் இரண்டு வாரங்களில் திருத்தம் செய்ய வேண்டும். அதுதொடர்பான நகலை 3 வாரங்களில் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.