கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736-ஆக அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு பின் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 736 ஆக உயா்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளை சீரமைக்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், தோ்தல் பிரிவு அதிகாரிகள் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் 690 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 25 வாக்குச்சாவடிகளில் ,1200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாக்காளா்கள் அதிகம் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரிப்பது, வாக்காளா்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள மூன்று வாக்குச்சாவடிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சீரமைப்பு பணிக்கு பின் நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736- ஆக உயா்ந்துள்ளது.
இதற்கிடையே வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் உள்ள கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராதாகிருஷ்ணன், வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.