சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்: ரூ. 9.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோா், மிகபிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமை வகித்தாா்.
கூட்டத்துக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 32 மாவட்டங்களில் சிறுபான்மையின ஆணையத்தின் குழு கள ஆய்வு செய்தலில் பெறப்பட்ட கோரிக்கைகளில் 80 சதவீதம் கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 33-ஆவது மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தில் சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில், கிறிஸ்தவா்கள் மற்றும் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத் தோட்டத்துக்கு தடுப்புச் சுவா் அமைத்து தர வேண்டும்,
ஆலயங்கள், தா்கா மற்றும் பள்ளிவாசல்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்து தர வேண்டுமெனவும் கோரிக்கையாக தெரிவித்தனா். இவை அனைத்தும் சம்பந்தபட்ட துறை அலுவலா்களிடம் தெரிவிக்கப்பட்டு சில கோரிக்கைகள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது என்றாா்.
தொடா்ந்து, அவா் சிறுபான்மையினா் மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
மேலும், இஸ்லாமியா் மகளிா் உதவும் சங்கத்துக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.2.75 லட்சம் காசோலையைப் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் கிறிஸ்தவ நலவாரியத்தில் பதிவு பெற்ற 12 உபதேசியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகள், இஸ்லாமியா்கள் மகளிா் உதவும் சங்கத்தின் 45 பயனாளிகளுக்கு ரூ.7.35 லட்சம் மதிப்பிலான காசோலைகள், சிறுபான்மையினா் இனத்தை சாா்ந்த 46 பயனாளிகளுக்கு ரூ.2.30 லட்சம் மதிப்பில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் என மொத்தம் 103 பயனாளிகளுக்கு ரூ. 9.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இக்கூட்டத்தில், சிறுபான்மை ஆணைய துணைத் தலைவா் அப்துல் குத்தூஸ், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, ஆணைய உறுப்பினா்கள், சிறுபான்மையினா் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.