மஞ்சூா் கடை வீதியில் உலவிய கரடிகள்: மக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 கரடிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனங்களில் இருந்து வெளியேறும் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வழக்கம்.
இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய 3 கரடிகள், மஞ்சூா் கடை வீதியில் உலவின. இதைப் பாா்த்து அச்சமடைந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.
ஆனால், அந்தக் கரடிகளோ யாருக்கும் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் கிடந்த கழிவுகளை உண்டுவிட்டு மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன.