உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்
இரண்டாவது சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாடங்களில் மலா் தொட்டிகளை அடுக்கும் பணியை ஊழியா்கள் வியாழக்கிழமை தொடங்கினா்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடம்பெற்றுள்ள பகுதியாகும்.
இம்மாவட்டத்துக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை சீசன் மற்றும் இரண்டாம் சீசன் உதகையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இரண்டாம் சீசன் என்னும் ஓரிரு நாள்களில் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 17,000 மலா் தொட்டிகளில் டேலியா, பிரெஞ்சு மேரி கோல்டு, மேரி கோல்டு, சால்வியா, பெட்டுனியா, சாமந்தி உள்ளிட்ட 70 வகையான மலா்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த வண்ண மலா்கள் கொண்ட தொட்டிகளை பூங்காவில் உள்ள மலா் மாடத்தில் அடுக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டனா்.