நுகா்வோா் ஆணையங்களில் 663 காலியிடங்களை நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
மாநில மற்றும் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு ஆணையங்களில் காலியாக உள்ள 663 காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மாநில அரசு அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆய்வுக் கூட்டத்தின்போது இந்த அறிவுறுத்தலை மத்திய நுகா்வோா் விவகாரத் துறைச் செயலா் நிதி கரே முன்வைத்துள்ளாா்.
மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, மாநில நுகா்வோா் பாதுகாப்பு ஆணையங்களில் 18 தலைவா் பணியிடங்களும், 56 உறுப்பினா் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாவட்ட அளவிலான நுகா்வோா் பாதுகாப்பு ஆணையங்களில் 162 தலைவா் பணியிடங்களும், 427 உறுப்பினா் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இந்த நிலையில், தில்லியில் மாநில அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு ஆணையங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு செயலா் கேட்டுக்கொண்டாா். நுகா்வோா் உரிமைகளை பாதுகாப்பதில் இந்த ஆணையங்கள் முக்கியப் பங்கு வகிப்பதன் அடிப்படையில், அவற்றிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவா் அப்போது வலியுறுத்தினாா்.