நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு அனைவருக்கும் தேவை
நுகா்வோா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
திருவாரூா் வட்டாரத்தில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்த மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கென வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து அவா் பேசியது: நுகா்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களைக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. கிராமப்புறங்கள், நகா்ப்புற குடிசைப் பகுதியிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளிலும் வசிக்கும் பொது மக்களிடையே இந்த மகளிா் சுயஉதவிக் குழுவினா் பயிற்சியளித்து பிரசாரத்தில் ஈடுபடுவா். நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து குடும்ப பெண்களிடம் கொண்டு சோ்த்தால், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணா்வு சென்றுவிடும் என்ற நோக்கில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மகளிா் சுய உதவிக் குழு கூட்டத்திலும் நுகா்வோப்பு பாதுகாப்புச் சட்டம் குறித்து கலந்துரையாடி நுகா்வோா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் சனிக்கிழமையும் (பிப்.1), திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் பிப்.5, கொரடாச்சேரியில் பிப்.6, நன்னிலத்தில் பிப்.7-ஆம் தேதிகளில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி நடைபெறவுள்ளது.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பா. செல்வபாண்டி, வட்டாட்சியா் செந்தில்குமாா், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சுழல் ஆராய்ச்சி மைய பயிற்சியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.