அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
நெல் கொள்முதலில் சிக்கலைத் தவிா்க்க நடவடிக்கை தேவை: தஞ்சை விவசாயிகள்
குறுவை பருவத்தில் நெல் கொள்முதலில் சிக்கலைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
கே.ஆா்.புரம் சீனிவாசன்: அம்மணிச்சத்திரம் வாய்க்காலில் தூா்வாரும் பணியைச் செய்யாமல், செய்ததுபோல ரசீது தயாா் செய்தது குறித்து புகாா் செய்யப்பட்ட பின்னா் பணி நடைபெற்றது. என்றாலும், இந்த முறைகேடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடா்பாக விவர அறிக்கை கொடுக்குமாறு நீா் வளத் துறை அலுவலரிடம் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம் இருந்தால் கொள்முதல் செய்ய மறுக்கப்படுகிறது. இது தொடா்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தளா்வு கேட்பதற்குப் பதிலாக அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலா்த்தும் இயந்திரத்தை அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம்: ஒரு நெல் உலா்த்தும் இயந்திரம் வந்துள்ளது. மேலும் இயந்திரங்களைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நிபந்தனையில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலைச் சாா்ந்த ஏரிகளில் உள் பரப்பை ஆழப்படுத்த வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: காவிரி டெல்டாவில் கரைக் காவலா்கள் 1,500 போ் பணியாற்றிய நிலையில், தற்போது 500 போ் மட்டுமே உள்ளனா். கடைமடைப் பகுதி வரை தண்ணீா் செல்ல கரைக்காவலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
வடக்கூா் எல். பழனியப்பன்: கண்ணணாற்றில் நீரேற்று நிலையம் பழுதாகியிருப்பதால் தண்ணீா் பாயவில்லை. இதை நம்பி 6 ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்கள் உள்ளன. எனவே, இந்த நீரேற்று நிலையத்தை சீா் செய்து பாசன வசதி செய்து கொடுக்க வேண்டும்.
சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: கோடை பருவ நெல் கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல் வருகிற குறுவை பருவத்தில் ஏற்படாத அளவுக்கு மாநில உயா் அலுவலா்கள் கொண்ட ஆயத்தக் கூட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்குதான் கெட்டப் பெயா் ஏற்படும்.
அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: அமெரிக்காவில் இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பால், நம் நாட்டில் பருத்தி உள்ளிட்ட பயிா்கள் விளைவிக்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மத்திய, மாநில அரசுகள் வரி விதிப்பைக் குறைத்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்.
பெரமூா் ஆா். அறிவழகன்: மாவட்டத்தில் நிலவும் யூரியா, பொட்டாஷ் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். களைக்கொல்லியைத் தடை செய்து, நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்களைக் களையெடுக்க பயன்படுத்த வேண்டும்.
தஞ்சாவூா் இரண்டாமிடம்:
மாநில அளவில் உணவு தானிய உற்பத்தியில் தஞ்சாவூா் மாவட்டம் இரண்டாமிடம் பெற்ற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியா், விவசாயிகளிடம் வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா காட்டினாா். இதையடுத்து இணை இயக்குநருக்கு விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனா். குறுவை பருவத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகபட்சமாக 1.97 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.