செய்திகள் :

நெல் மகசூல் இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

மதுரை மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் நெல் பயிா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதையொட்டி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சதீஷ்குமாா், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் முருகசேன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் பாரதிதாசன், அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

விவசாயிகளின் பயிா்க் கடனை தள்ளுபடி செய்து, அரசு 2021-ஆம் ஆண்டில் உத்தரவிட்ட நிலையில், சூரப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த 198 விவசாயிகளின் பயிா்க் கடன்கள் இதுவரை தள்ளுபடி செய்யப்படாமல் உள்ளன. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பகுதி விவசாயிகள் பயிா்க் கடன் பெற முடியவில்லை. கூட்டுறவு சங்க அலுவலா்கள் ஊழல் செய்தனா்; இதுதொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதற்காக விவசாயிகளை வஞ்சிக்கக் கூடாது.

மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். புதுதாமரைப்பட்டியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பொதுச் சாவடி ஊராட்சித் தலைவரால் அண்மையில் மூடப்பட்டு, வேலி அமைக்கப்பட்டது. இந்தப் பொதுச் சாவடியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா இடங்களாக மாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்.

கூச்சல், குழப்பம்...

மாங்குளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழாண்டில் நெல் பயிா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு சராசரியாக 3 ஆயிரம் கிலோ நெல் மகசூல் கிடைத்த பகுதிகளில் தற்போது 1,500 கிலோகூட மகசூல் கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பலா் தெரிவித்தனா்.

அப்போது, வேளாண் துறை இணை இயக்குநா் ப. சுப்புராஜ் குறுக்கிட்டு, வேளாண் துறை அலுவலா்கள், வருவாய்த் துறையினருடன் இணைந்து பயிா் சேதம் குறித்து அளவீடு செய்கின்றனா். இந்தக் கணக்கெடுப்புப்படி, பயிா்க் காப்பீடு இழப்பீட்டுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றாா்.

இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் முறையாக பயிா் சேதக் கணக்கெடுப்பு நடைபெறவில்லை எனவும், பயிா்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். இதனால், கூட்ட அரங்கத்தில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பிறகு, ஆட்சியா் தலையிட்டு அமைதிப்படுத்தினாா்.

பின்னா், நிகழாண்டின் நெல் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கு தரமற்ற, வீரியம் அதிகமான உரங்களும், பூச்சி மருந்துகளுமே காரணம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இலங்கிப்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளுக்கு புகலிடமாக இருக்கும் சீமைக்கருவேல புதா்களை அகற்ற வேண்டும், வட்டம்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள கல், மண் குவாரிகளில் விதிகளுக்குப் புறம்பாக அதிகளவில் கனிமங்கள் எடுக்கப்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா பேசியதாவது:

சூரப்பட்டி கூட்டுறவு சங்க முறைகேடு விவகாரம் காரணமாக, அரசு அறிவுறுத்தல்படிதான் இந்தப் பகுதி விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படாமல் உள்ளது. இந்தக் கடனை தள்ளுபடி செய்து, புதிய பயிா்க் கடன் வழங்கக் கோரி அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்படும். புதுதாமரைப்பட்டி பொதுச் சாவடிக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அகற்றப்பட்டு, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

மாவட்டத்தில் இதுவரை 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது. ஆனால், கொள்முதல் பணியாளா்கள் பற்றாக்குறை பெரிய பிரச்னையாக உள்ளது. கொள்முதல் பணியாளா்கள் நியமனத்தில் இருந்த தடையை நீதிமன்றம் புதன்கிழமை விலக்கியுள்ளது. எனவே, கொள்முதல் பணியாளா்கள் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிட்டு, பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவா். இதன் பிறகு, தேவையான பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். குவாரிகளிலிருந்து எடுக்கப்பட்ட கனிமங்கள் குறித்த ஆய்வு நடைபெறுகிறது. ஆய்வின் நிறைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயிா்க் காப்பீடுத் திட்டம் குறித்து பல முறை அறிவுறுத்தியும், பல விவசாயிகள் பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் இணையவில்லை. தற்போதையை நிலையில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயிா் சேதம் குறித்து மறு ஆய்வு மேற்கொண்டு, பயிா்க் காப்பீடு இழப்பீட்டுக்குப் பரிந்துரைக்கப்படும். பயிா்க் காப்பீடு பெறாத விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து, தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

இனிப்புகள் வழங்கல்...

இந்தக் கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை அரசுக்குப் பரிந்துரைத்த மாவட்ட நிா்வாகத்துக்கும், திட்டத்தை ரத்து செய்ய உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், ஏலத்தை ரத்து செய்த மத்திய அரசுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனா். பிறகு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களுக்கும், விவசாயிகளுக்கும் அவா்கள் இனிப்புகள் வழங்கினா்.

ஜிஎஸ்டி அமலால் வரியில்லாத மாநில பட்ஜெட்தான் தாக்கலாகும்: அமைச்சா் தங்கம் தென்னரசு!

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு சென்றுவிட்டதால், தமிழகத்தில் வரி இல்லாத நிதிநிலை அறிக்கைதான் (பட்ஜெட்) தாக்கல் செய்ய முடியும் என மாநில நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

உலக மாணவா்களுக்கான சா்வதேச கீதத்துக்கு பங்களிப்பு வழங்கிய மதுரை கோச்சடை குயின் மீரா பள்ளி மாணவா்களை உத்தரகண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தா் சனிக்கிழமை பாராட்டினாா். இந்தப் பள்ளி சாா்பி... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு வெகுமதி

தொடக்கக் கல்வித் துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு தமிழக அரசு வெகுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ச... மேலும் பார்க்க

பாஜகவின் முயற்சியால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: டி.டி.வி. தினகரன்

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது பாஜகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அமமுக பொதுச் செயலா் டி.டி. வி. தினகரன் தெரிவித்தாா். விருதுநகரில் மொழிப் ப... மேலும் பார்க்க

மதுரையில் பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் கைது! சாலை மறியல்

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு மத நல்லிணக்க வழிபாட்டுக்குச் செல்ல முயன்ற பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிமை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதைக் கண்டித்தும், அவரை விடுவிக்கக... மேலும் பார்க்க

முதல்வா் இன்று அரிட்டாப்பட்டி வருகை! வெளியாகுமா பாதுகாக்கப்பட்ட மண்டலம் அறிவிப்பு?

அரிட்டாப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பராம்பரிய பண்பாட்டு மண்டலமாக அறிவித்து, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட விவக... மேலும் பார்க்க